மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா? : எதிர்பார்ப்பில் விவசாயிகள்..!!

23 May 2021, 6:03 pm
metur dam - updatenews360
Quick Share

சேலம்: ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று மேட்டூர் அணை. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். மேட்டூர் அணை மூலம் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவை பருவம் என்பது விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் வருமானம் தரும் நெல் சாகுபடி பருவமாகும். இதற்கென ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டி இருக்கும் போது போதுமான நீர்வரத்து இருந்தால் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். 2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இதே காலத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்ததால், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டும் போதுமான நீர் இருப்பு உள்ளதால் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணையை பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 97.79 ஆக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1887 கன அடி ஆகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி ஆகவும் உள்ளன. அணையில் நீர் இருப்பு 62 டி.எம்.சி. ஆக உள்ளது. ஜூன் மாதம் 1ம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் வட கேரளா மற்றும் கார்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஏற்கனவே உள்ள வழக்கப்படி ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று விவசாய வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது.

மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண். உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.

அணை திறப்பு குறித்து அரசு முறையாக அறிவித்தால் விவசாயிகள் முதல் கட்ட பணிகளை தொடங்குவார்கள் என்பதால் முன் கூட்டியை அரசு முறையாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். எனவே மேட்டூர் அணை திறப்பு குறித்து அரசு முறையாக ஓரிரு நாளில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

Views: - 154

0

0