சூட்கேஸில் பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் : தனி வீடு எடுத்து ஆண் நண்பர்களுடன் தங்கியிருந்தது அம்பலம்!!
Author: Udayachandran RadhaKrishnan10 February 2022, 10:57 am
திருப்பூர் : சூட்கேசில் பெண் சடலம் கிடந்த வழக்கில் , பெண் குடியிருந்த வீட்டை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 7 ஆம் தேதி காலை திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதுநகர் பகுதியில் கால்வாயில் கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் சொன்னதும் சூட்கேஸை சோதனை செய்ததில் அதில் பெண் சடலம் அடைபட்டு கிடந்தது.
உடனடியாக உடலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் யார் ? கொலை செய்யப்பட்ட பெண் யார் ? என்பன போன்ற விசாரனைகளை தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெண் சடலத்துடன் கூடிய சூட்கேஸை கொண்டு வந்தது தெரிய வந்தது. மேலும், தனிப்படையினர் தொடர் விசாரணையில், கொலையான பெண் குடியிருந்த வீட்டை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் , அப்பெண் ஒரு நபரோடு கடந்த 1 மாதமாகதான் திருப்பூர் வந்து வெள்ளியங்காடு கே.எம்.ஜி பகுதியில் வீடு எடுத்து குடியிருந்தது தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்ணோட தங்கிருந்த நபர் வீட்டின் உரிமையாளரிடம் தான் வீட்டை காலி செய்வதாக கூறி பொருட்களை எடுத்துசென்றுள்ளார். அப்போதுதான் யாருக்கும் சந்தேகம் வராதபடி கொலையான பெண்ணை சூட்கேஸில் வைத்து கொண்டு சென்று புதுநகர் பகுதியில் கால்வாயில் வீசியுள்ளனர் என்கின்றனர் , காவல்துறையினர்.
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அப்பெண்ணும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்த நிலையில் , அப்பெண்ணுடன் தங்கியிருந்த நபரும் திருப்பூரில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
மேலும், தனிப்படையினர் விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் நேகா என்றும், உடன் தங்கியிருந்தவர்கள் அபிதாஸ் மற்றும் ஜெய்லால் என்றும் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் வடமாநிலங்களுக்கு தப்பி சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்து விசாரனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.