பெண் மருத்துவர் உயிரைப் பறித்த சுரங்கப்பாதை: பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் நிரந்தரமாக மூட முடிவு..!!

Author: Aarthi Sivakumar
18 September 2021, 6:48 pm
Quick Share

புதுக்கோட்டை: ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய நீரில் மூழ்கி பெண் மருத்துவர் உயிரிழந்ததையடுத்து, பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் பாதையை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தொடர் மழை பெய்து வந்தது. வெள்ளனூர், பொம்மாடிமலை, தொடையூர், நார்த்தாமலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்த நிலையில் பொம்மாடி மலை – துடையூர் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் சுமார் 20 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நின்றது.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஒசூர் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவரான சத்யா தனது மாமியார் ஜெயாம்மாள் இருவரும் காரில் சென்றனர். கொஞ்சம் தண்ணீர் தான் தேங்கி நிற்கிறது சென்று விடலாம் என நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், தேங்கிய தண்ணீரில் சுரங்கப் பாதையில் கார் நின்று விட்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில், மள மளவென்று காருக்குள் மழைநீர் நீர் புகுந்தது. இதில், காரின் சைலன்சருக்குள் தண்ணீர்ப் புகுந்துவிட்டதால், காரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரது மாமியார் மட்டும் கார் கதவை திறந்து கொண்டு நீச்சல் அடித்து கரை சேர்ந்துள்ளார். ஆனால், சத்யா சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதனைக் கழட்டிக் கொண்டு உடனே வெளியே வர முடியாமல், காருக்குள் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் சத்யாவின் சடலத்தை காரில் இருந்து பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தங்கள் கிராமத்திற்கு செல்லும் தரை பாலத்தை மேம்பாலமாக மாற்றி தரக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களுடைய கருத்தை கேட்காமலேயே இந்த சுரங்கப் பாதையை அமைத்துள்ளனர்.

மழைக்காலங்களில் இதுபோல் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி விடுவதால் பெரும் அசம்பாவிதம் நடந்து விடும் என்பதற்காகத்தான் தங்கள் கிராம மக்கள் போராடி வந்தோம். இனியாவது அந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கீரனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் வருவாய்துறை, காவல் துறையினர், ரயில்வே துறையினர் பொது மக்களுடன் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. மேலும், பொதுமக்களில் கோரிக்கையை ஏற்று தற்போது மருத்துவர் சத்யா உயிரிழப்பிற்கு காரணமான சுரங்க பாதையை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 221

0

0