தொடரும் வெடி விபத்து: விருதுநகரில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்..!!

7 March 2021, 3:22 pm
pattas - updatenews360
Quick Share

விருதுநகர்: சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் 2 குழுக்கள் அமைத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் 13 ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 12ம் தேதி நடந்த வெடிவிபத்தில் 24 தொழிலாளர்கள் இறந்தனர். காயம் அடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

அதே நாளில் வி.சொக்கலிங்காபுரத்தில் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் உயிர் சேதம் இல்லை. அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் நடந்ததால் அச்சங்குளம் விபத்து குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்தது. இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விதிகளை மீறி செயல்பட்டதாக 28 பட்டாசு ஆலைகளை சீல் வைத்தனர்.

மேலும் சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் 2 குழுக்கள் அமைத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் 13 ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். மேலும் விதிமீறல் இருந்தால் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இதற்காக அடிக்கடி சோதனை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைக்கும் பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் உரிமம் வாங்க வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. இதனால் பட்டாசு ஆலை அதிபர்கள் மிகவும் சங்கடத்திற்குள்ளாகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், பட்டாசு ஆலைகளை பாதுகாக்கவும் நாளை முதல் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை மூடுவது என ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Views: - 9

0

0