தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமையும் : விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சஸ்பென்ஸ்!!

26 October 2020, 1:49 pm
Vijaya Prabha - Updatenews360
Quick Share

மதுரை : தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும் என்றும் இத்தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ளது என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை காளவாசல் தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் விஜயகாந்த் இளைய மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேப்டன் உடல்நிலை சீராக உள்ளது. கொரானா பாதிப்பு தற்போது இல்லை. ஆரோக்கியமாக உள்ளார். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நன்றாக உள்ளார். அவரை குணப்படுத்திய மருத்துவர் செவிலியர்களுக்கு நன்றி என கூறினார்.

தேர்தல் பணிகளை தேமுதிக தொடங்கிவிட்டதாக தெரிவித்த அவர், செயற்குழு பொதுக்குழு கூட்டி பணிகளை தீவிரப்படுத்துவோம் என தெரிவித்தார். தேமுதிக ஆரம்ப காலத்தில் தனித்தே களம் இறங்கியுள்ளோம். கேப்டனும், பிரேமலாதவும் கட்சித்தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவார்கள் என கூறிய அவர், தேமுதிக தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை. வியூகங்கள் மாறும், கட்சிக்கு எது பலமோ அதன்படி செயல்படுவோம், நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. கண்டிப்பாக அரசியல் களம் மாறும் என தெரிவித்தார்.

திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டுமே அதை நிருபித்து காட்டியுள்ளோம். தேமுதிக தவிர்த்து மூன்றாவது அணி என எந்தக்கட்சியும் சொல்ல முடியாது என கூறினார்.

தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும்,அந்த நம்பிக்கை உள்ளது. மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது என்றும் வரும் தேர்தலில் பெரியவர் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.கலைஞர் ஜெயலலிதா இல்லாத இச்சமயத்தில் தனித்துவமான தலைவர் இல்லை. அதனால் இது முதல் தேர்தல் போல எனவும் கூறினார்.

நிச்சயமாக எல்லா தொகுதிகளிலும் கேப்டன் பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் மக்களை பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம் என கூறினார். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும். களத்தில் சந்திப்போம் என கூறினார்.

Views: - 17

0

0