“எழுத்தறிவித்த இறைவி“ : மலைக்கிராம குழந்தைகளுக்காக வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றிய பட்டதாரி இளம்பெண்!!

18 June 2021, 5:01 pm
College girl - Updatenews360
Quick Share

கோவை : 20 குழந்தைகளுக்காக தனது வீட்டையே பள்ளிக்கூடம் போல மாற்றி தினசரி வகுப்பு எடுக்கும் அக்கிராம முதல் பட்டதாரி பெண்ணுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

எழுத்தில்லையேல் இவ்வுலகமே இல்லை என்ற சொல்லுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் சின்னாம்பதி பழங்குடி கிராமத்தின் முதல் பட்டதாரி பெண் சந்தியா.

கோவை மாவட்டம் வாளையாறு அருகே உள்ள சின்னாம்பதி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சந்தியா. க.க.சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். (சி.ஏ) படிப்பை முடித்துள்ளார்.

சந்தியா மட்டுமே சின்னாம்பதி பழங்குடி கிராமத்தில் படித்த முதல் பட்டதாரி. இதற்கு முன் படித்த அக்கிராம மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வரை படிப்பதே அரிது. அதிலும் பெண் குழந்தைகளில் பள்ளிக்கு செல்வோர் எண்ணிக்கை என்பது மிக சொற்பமே.

தமிழக – கேரள எல்லையாகவும், கோவை மாவட்டத்தில் இறுதி கிராமமாக உள்ள இந்த மலை கிராமத்திற்கு நாள்தோறும் இரண்டு முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் பெற்றோர்கள் உறுதுணையோடு சந்தியா பள்ளி படிப்பை படித்து, தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

சந்தியா கல்லூரி படிக்கும் போதே அக்கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுப்பது, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார்.

அவரை ஊக்குவிக்கும் வகையில் எட்டிமடையை சேர்ந்த தனியார் நிறுவனம் சந்தியா பழங்குடி கிராம குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க ஊதியம் போன்று நிதியை வழங்கியது.

இந்நிலையில் கொரோனா முதல் அலையின் போது முழு ஊரடங்கின் போது பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. இதனால் சின்னாம்பதி பழங்குடி கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு சந்தியா சிறப்பு வகுப்புகளை எடுத்துள்ளார்.

பள்ளி செயல்படுவது போல, காலை 8 முதல் 12 மற்றும் மாலை 3 முதல் 6 மணி வரை சிறப்பு வகுப்புகளை எடுத்து வந்தார். பழங்குடி கிராமங்களில் இருந்து பள்ளிக்கும் வரும் மாணவர்களின் பெற்றோர்கள் யாரும் படிப்பறிவு இல்லாததால், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்கள் கூட பள்ளியில் கற்பது மட்டுமே ஒரே வழியாக இருந்ததுள்ளது.

ஆனால் பட்டதாரி சந்தியா இங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு முக்கியதுவம் கொடுத்து பாடம் கற்றுக்கொடுப்பதால், பள்ளி செல்லாமல் வீட்டில் உள்ள நேரத்திலும் அங்குள்ள மாணவர்கள் கல்வியறிவு பெறுவதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை .

இதே போல் இரண்டாம் அலையின் போதும் பழங்குடி பட்டதாரி பெண் சந்தியா இங்குள்ள சிறுவர், சிறுமியருக்கு பாடம் எடுத்து வருகிறார். பழங்குடி கிராமத்தில் ஒருவர் படித்து வருவதே சவாலாக உள்ள நிலையில் பெண் பட்டதாரி ஒருவர் சின்னாம்பதி பழங்குடி கிராமத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்பதை அவர் பெருமையுடன் தெரிவித்து வருகிறார்.

எழுத்தறிவித்தவனே இறைவன் ஆவான் என்ற பழமொழிக்கு ஏற்ப அங்குள்ள 20 குழந்தைகளுக்கு எழுத்தை அறிவித்த சந்தியா தான் எங்கள் ஆசான், கடவுள் எல்லாமே என அங்குள்ள குழந்தைகளும் கூறுவது புல்லரிக்க வைத்துள்ளது. எந்த வசதியும் இல்லாத இந்த கிராமத்திற்கு தமிழக அரசு கைதூக்கி உதவுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Views: - 258

7

1