அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்தவருக்கு முதல் பரிசு : இரண்டாம் பரிசு பெற்றவர் புகார்!!

21 January 2021, 4:35 pm
alanganallur Jalli - Updatenews360
Quick Share

மதுரை : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள் மாறட்டம் செய்து முதல் பரிசு வாங்கப்பட்டதாக 2 ஆம் இடத்தை பிடித்த மாடுபிடி வீரர் கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது, இப்போட்டியில் மாடுபிடி வீரருக்கு முதல் பரிசான காரை கொடுப்பதில் மோசடி நடைபெற்று உள்ளதாகவும், ஒரே பதிவு எண்ணில் 2 பேர் ஜல்லிகட்டில் பங்கேற்று முதல் பரிசை வாங்கி உள்ளதாக 2 ஆம் இடத்தை பிடித்த கருப்பண்ணன் என்கிற மாடுபிடி வீரர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாடுபிடி வீரர் கருப்பண்ணன், “முதல் சுற்று முதல் 3ஆம் சுற்று வரை பங்கேற்ற ஹரிகிருஷ்ணன் என்கிற மாடுபிடி வீரர் 5 காளைகளை பிடித்து முன்னிலை வகித்த பொழுது 3 ஆம் சுற்றில் காயம் அடைந்தார்.

இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் தனது 33 எண் கொண்ட பனியனை மற்றோரு பதிவு செய்யப்படாத மாடுபிடி வீரரான கண்ணனிடம் கொடுத்ததாகவும், கண்ணன் 8 காளைகளை பிடித்ததால் இரண்டு பேரும் காளைகளை அடங்கியதை கணக்கில் கொண்டு முதல் பரிசு வழங்கி உள்ளனர்” என கூறினார்.

மாடுபிடி வீரர் மணி கூறுகையில் “நேர்மை, வீரத்துக்காகவும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது, புகழ்பெற்ற ஜல்லிக்கட்டில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது, இதனை விசாரித்து முதல் பரிசை கருப்பண்ணனுக்கு வழங்க வேண்டும்” என கூறினார். புகார் குறித்து விசாரணை செய்வதாக மாவட்ட ஆட்சியர் புகார்தாரரிடம் தெரிவித்து உள்ளதாக கூறினார்

Views: - 0

0

0