தேனுபுரீஸ்வரர் கோவில் ஓதுவார் பணிக்கு பெண் நியமனம்: தேவாரப் பாடல்களை பாடி பணியை தொடங்கினார்…!!
Author: Aarthi Sivakumar16 August 2021, 12:35 pm
தாம்பரம்: மாடம்பாக்கத்தில் உள்ள பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு பெண் ஒருவர் ஓதுவார் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள நிகழ்வு பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்’ தொடங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். 58 பேருக்கு அர்ச்சகர்களாக பணி ஆணை வழங்கப்பட்டது.
இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என்பவரது மனைவி சுகாஞ்சனா என்ற பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தாம்பரம் சேலையூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் கோபிநாத் டிசைனிங் இன்ஜினியராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
தற்போது இவர் இந்துசமய அறநிலையத் துறையின்கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுவயதில் பாடல்களை நன்றாக பாடுவார் என்பதால் இவரது பெற்றோர் கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்த்துள்ளனர். பள்ளியில் பாடல்களை சிறப்பாக பாடி பயிற்சியை சிறப்பாக முடித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக பெண் ஓதுவாராக இவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நேற்று முதல் பணியில் சேர்ந்த சுகாஞ்சனா காலையில் பஞ்ச புராணம், தேவாரம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணப் பாடல்களை பாடினார். இதைத் தொடர்ந்து மாலையும் பூஜைகள் முடிந்த பிறகு பாடல்களைப் பாடி பக்தர்களை பக்தியில் ஆழ்த்தினார்.
0
0