ஓணம் பண்டிகை கொண்டாட்டம்…பூக்கள் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,500க்கு விற்பனை..!!

Author: Aarthi Sivakumar
20 August 2021, 12:02 pm
Quick Share

குமரி: கேரளா மக்களின் வசந்த விழாவான ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூ சந்தையில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஓணப்பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் சிறப்பு விற்பனை நடப்பது வழக்கம், அந்த வகையில் இன்று  தோவாளை மலர் சந்தையில் சிறப்பு பூ சந்தை நடைபெற்று வருகிறது.

மேலும்  ஓணப்பண்டிகை, சுபமுகூர்த்த தினம் மற்றும் கோவில் திருவிழாக்கள் இவற்றை  ஒட்டி பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. பொதுவாக பெங்களூர், ஓசூர், ஊட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் இங்கு கொண்டுவரப்பட்டு,  கன்னியாகுமரி மாவட்டத்திற்குள்ளும், கேரளா மாநிலத்தில் கொல்லம், கொச்சி, திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் இந்த ஆண்டும் கேரளா வியாபாரிகள் வரத்து இல்லாமல் சிறப்பு பூ சந்தை நடைபெற்று வருகிறது. கேரளா வியாபாரிகள் தொலைபேசி , வாட்ஸ்அப் மற்றும் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பூக்கள் விற்பனை செய்யபடுகிறது.

விற்பனை செய்யப்பட்ட பூக்கள் வியாபாரிகள் இன்றி வாகனங்கள் மூலம் கேரளா விற்கு  எடுத்து செல்லப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்  ஒரு கிலோ,  450 ரூபாய் க்கு விற்பனையான மல்லிப்பூ இன்று 1200 ரூபாய் க்கும்,   300 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ 1100 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போன்று கிரேந்தி பூ 90 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும்,  ஆரஞ்சு கிரேந்தி 120 ரூபாய், ரோஸ் 250 ரூபாய், செவ்வந்தி பூ 200 ரூபாயிலிருந்து, 350 ரூபாய் க்கும்  விற்பனையாகிறது.பூக்களின் தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

Views: - 598

1

0