இதைச் செய்தால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்கு கொண்டு வர அனுமதிக்க தயார் : மத்திய அரசுக்கு நிபந்தனை போட்ட தமிழக அரசு!!

Author: Babu Lakshmanan
21 September 2021, 8:51 am
ptr - petrol bunk- updatenews360
Quick Share

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வருவதற்கு மத்திய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிபந்தனை ஒன்றை போட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தனது பங்கிற்கு ஒருசில ரூபாய்களை குறைத்து தமிழக அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேவேளையில், தேர்தல் பிரச்சாரத்தின் போதிலிருந்து பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வந்தன.

ஆனால், அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதற்கு தமிழகம் முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருந்தாலும் கூட, கூட்டம் நடைபெற்ற அன்றைய தினமே, கடிதத்தின் மூலம் இந்த எதிர்ப்பு பதிவு செய்தது. இது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது.

இந்த நிலையில், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் எனில், மத்திய அரசு இதனைச் செய்தாக வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு கண்டிஷனை போட்டுள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசியதாவது :- பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியில் கொண்டுவர வேண்டும் என 2018-ம் ஆண்டே மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். இந்த ஜிஎஸ்டி கூட்டக் குறிப்பில் மத்திய அரசு இதனை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதாக சொல்லவில்லை. கேரள உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு தொடர்பாக அளித்த தீர்ப்பில், பெட்ரோல், டீசல் விலையை ஏன் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரக்கூடாது என்பதை ஜிஎஸ்டி கவுன்சிலில் வைத்து அந்த முடிவை எங்களுக்கு தெரிவி யுங்கள் எனக் கூறி இருக்கின்றனர்.

மத்திய அரசுக்கு இதில் விருப்பமில்லை, எந்த மாநில அரசுகளும் இதனை விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் மத்திய அரசின் மொத்த வருமானம் 20 சதவிகிதம் பெட்ரோல், டீசலில் மட்டும் வருகிறது. ஜிஎஸ்டி வந்த பிறகு மாநில அரசுகளின் வரி உரிமை ஜிஎஸ்டி மூலம் எடுக்கப்பட்டு விட்டது.

70 ஆண்டுகளுக்கு பிறகு ஜிஎஸ்டியை உருவாக்கி மறைமுக வரி உரிமையை 75 சதவிகிதம் இழந்து விட்டோம். மீதமுள்ள இரண்டு வகை பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான பொருட்கள் மீதான வரிகள் மட்டும்தான். மாநிலங்களுடைய உரிமைகளை எல்லாம் எடுத்துவிட்டீர்கள் என்றால் நாங்கள் எப்படி எங்கள் பொருளாதாரத்தை மேலாண்மை செய்வோம் எனக் கேட்கிறோம்.

ஒரு காலத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் எடுத்துக் கொண்டிருந்த வரியை இன்றைக்கு ரூ.32 எடுக்கிறபோது, நீங்கள் எப்போது செஸ் சர்சார்ஜை கைவிடுகிறீர்களோ, அதாவது பகிர்ந்து கொடுக்காத வரியை எப்போது கைவிடுகிறீர்களோ அப்போது எங்கள் வரியை விட்டு ஜிஎஸ்டியில் சேருவதற்கு மறுபரிசீலனை செய்வோம்.

ஜிஎஸ்டி-க்கு பெட்ரோல் டீசலை கொண்டுபோய் வைத்தால் நம்முடைய 20 சதவிகித வரி 15 சதவிகிதம் ஆகும். ஆனால் அதனுடைய விளைவை நாம் காண முடியும். ஏற்கெனவே 3 ரூபாய் குறைத்தபோது அதன் விளைவைக் காண முடிந்தது . பெட்ரோல், டீசல் மீதான மொத்த வரி குறைந்தால் சாமானியர் களுக்கு நல்லது. இந்த ஐந்து, ஆறு சதவிகிதத்தை ஏற்க தமிழ் நாடு போன்ற அரசாங்கம் ஏற்கத் தயாரானால், மத்திய அரசுக்கு நாம் விதிக்கும் நிபந்தனை எல்லாம் அவர்கள் தற்போது எடுத்து வரும் ரூ.31-ஐ எடுத்து விட வேண்டும். அதனை என்று செய்கிறார்களோ அன்று அனைவரும் சேர்ந்து ஜிஎஸ்டி-க்குள் சென்று விடுவோம், என்று கூறினார்.

Views: - 266

0

0