தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விருதுநகர் அகழ்வாராய்ச்சி: தொன்மையான சுடுமண் பொருட்கள் கண்டுபிடிப்பு.!!

Author: Rajesh
21 April 2022, 4:23 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடுமண், பகடைக்காய் உள்ளிட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடபட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள் உள்ளிட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொன்மையான மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிவதாக தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் சில தொன்மையான பொருட்கள் கிடைத்துள்ளது.

தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழ்வாய்வின் போது கிடைக்கப்பெறும் தொன்மையான பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

Views: - 595

0

0