அமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ்: இயல்பு நிலைக்கு திரும்பினார் என மருத்துவமனை தகவல்..!!

27 January 2021, 12:48 pm
minister kamaraj - updatenews360
Quick Share

சென்னை: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நலக் குறைவால் கடந்த 5ம் தேதி சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆா்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அங்கேயே சிகிச்சை மேற்கொண்டார்.

பின்னர், 7ம் தேதி அவருக்கு எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. அமைச்சர் காமராஜூவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவலை ஆஸ்பத்திரி நிர்வாகமே வெளியிட்டது. ஒருசில நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பினார். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு அவர் சென்றார்.

இந்நிலையில், மீண்டும் அமைச்சர் காமராஜூவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எம்.ஜி.எம் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக உடல்நலம் மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அமைச்சர் காமராஜின் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு அதிகரித்து இருப்பதாகவும், இதனால் அமைச்சர் காமராஜ் உடல்நிலை இயல்புநிலைக்கு திரும்பி இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. உடல் சமநிலையை பொறுத்து விரைவில் அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0