கூண்டுகள் அமைத்து மயக்க ஊசியுடன் காத்திருக்கும் வனத்துறை : 2வது நாளாக சிறுத்தையை பிடிக்க தீவிரம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 January 2022, 10:38 am
திருப்பூர் : அவிநாசி அருகே சோளக்காட்டில் பதுங்கியுள்ள சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க 2வது நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியில் வரதராஜன் என்பவரது தோட்டத்தில் சோளத்தட்டு அறுவடை நடைபெற்று வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தோட்டத்தில் இருந்த மர்ம விலங்கு ஒன்று திடீரென தோட்டத்தின் உரிமையாளர் வரதராஜன் மற்றும் அவரது உதவியாளர் மாறன் ஆகிய இருவரை தாக்கியது.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் புலி தாக்கியதாக தெரிவித்ததை அடுத்து வனத்துறையினர் , தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வனத்துறையினர் விசாரணையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகப்படுவதாக தெரிவித்ததையடுத்து மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தைச் சுற்றிலும் நவீன சென்சார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் .
மேலும் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணித்தனர். இந்நிலையில் சிறுத்தை இருப்பதை உறுதி செய்ய வனத்துறை பாதுகாவலர்கள் முழு கவச உடை அணிந்து புதர்ப்பகுதிக்குள் செல்கையில் எதிர்பாராத விதமாக வன பாதுகாவலர் மணி என்பவரை சிறுத்தை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
இதனையடுத்து திருப்பூர் கோவை மாவட்ட வனத்துறையினர் தற்போது சிறுத்தை உள்ள இடத்தை சுற்றிலும் வலை அமைத்தும் , 3 கூண்டு வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் தயார் நிலையில் உள்ளனர்.
3 கூண்டுகள் அமைக்கப்பட்டு நேற்று இரவு அதில் மாமிசங்கள் வைக்கப்பட்ட நிலையிலும் , தற்போது வரை சிறுத்தை கூண்டில் சிக்கவில்லை. வனத்துறையினர் , காவல்துறையினர் , தீயணைப்பு துறையினர் என 50 க்கும் மேற்பட்டோர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0
0