சொத்து குவிப்பு புகார்:ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு

Author: kavin kumar
19 August 2021, 8:43 pm
Quick Share

சென்னை: உயர் நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலமும், அதேபோல் திருத்தங்கல் பகுதியில் 23 லட்சம் மதிப்பிலான வீட்டுமனை மற்றும் நான்கு லட்சத்திற்கு நிலமும் வாங்கியுள்ளார். ஆனால் சந்தை விலையில் இந்த இடங்கள் பல கோடிகளை தாண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலங்களை குறைந்த விலையில் வாங்கியதன் மூலம், ராஜேந்திர பாலாஜி ஏழு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மகேந்திரன் கோரிக்கை வைத்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது, “ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையில், எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்பதால் வழக்கை முடிக்க பொதுத்துறை உத்தரவிட்டதாதாக” லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
சொத்து குவிப்பு புகார் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சத்திய நாராயணனும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிப்பதால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர்.

இரு வேறு தீர்ப்பு வழங்கப்பட்டதால், இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி கருத்தை அறிய வழக்கு விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் விசாரணை நடத்தி தற்போது மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 192

0

0