முன்னாள் எம்எல்ஏவின் கார் கண்ணாடியை உடைத்து 12 சவரன் நகை கொள்ளை: ஹோட்டலுக்கு சென்ற போது மர்மநபர்கள் கைவரிசை..!!

Author: Rajesh
1 March 2022, 5:33 pm
Quick Share

கோவை: ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றபோது அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார் கண்ணாடியை உடைத்து 12 பவுன் நகை 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் சந்திராபுரம் பி.ஆர்.ஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். திருநெல்வேலி ஆலங்குளம் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இவரது மனைவி சாவித்திரி இவர்கள் திருப்பூரில் பேப்ரிகேஷன் தொழில் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள், திருப்பூரில் இருந்து காரில் கோவை வந்தனர். பின்னர் இருவரும் திருச்சி ரோடு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் காரை எடுக்க வந்தனர். அப்போது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேக்கை காணவில்லை. பேக்கினுல் 12 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹோட்டலுக்கு இவர்கள் காரில் வந்த போது மர்ம நபர்கள் நோட்டம் விட்டு திட்டமிட்டு கொள்ளை அடித்ததாக தெரிகிறது. காரில் பணம் நகை இருக்கும் விவரம் திருடர்களுக்கு தெரிந்திருக்கலாம். கல் அல்லது இரும்பு கம்பியால் கண்ணாடியை உடைத்து அவர்கள் கொள்ளையடித்து இருப்பதாக தெரிகிறது. கையில் துணியை சுற்றி கண்ணாடியை உடைத்து இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஹோட்டல் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.ஹோட்டல் அருகே உள்ள 200 அடி தூரத்தில் கேமரா காட்சி ஒன்று பதிவானது. இதில் ராஜேந்திரன் மற்றும் சாவித்திரி ஹோட்டலுக்கு சென்றதும் திரும்ப வந்ததும் பதிவாகியிருந்தது. திருடர்கள் வந்த திசைக்கு எதிராக கேமரா என்பதால் அவர்களை அடையாளம் எதுவும் பதிவாகவில்லை. எனவே போலீசார்கள் வேறு பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 771

0

0