வ.உ.சி.யின் 84வது குருபூஜை விழா : குமரி – நெல்லைக்கு சீறிய 32 வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார்!!
18 November 2020, 3:49 pmகன்னியாகுமரி : வ.உ.சி.யின் 84வது நினைவு தினத்தையொட்டி, குமரியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற 32 வாகனங்களை போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தினர்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம்பிள்ளையின் 84வது நினைவு தினத்தையொட்டி, குமரி மாவட்ட தென்னக மக்கள் இயக்கம் சார்பில் தாழக்குடியில் உள்ள வ.உ.சி உருவ சிலைக்கு இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், இந்த பேரவை நிர்வாகிகள் 32 வாகனங்களில் குமரியில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த புறப்பட்டனர். அப்போது, மாவட்ட எல்லை பகுதியான ஆரல்வாய்மொழியில் ஊர்வலமாக செல்ல மூன்று வாகனங்களுக்கு மட்டுமே முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே மீதம் உள்ள வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என கூறி கார்களை பறிமுதல் செய்து, ஆரல்வாய்மொழி காவல்நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மீண்டும் ஏழு வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். இதனால், 22 வாகனங்களில் வந்த பேரவையினர் கோபமடைந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவல்துறைக்கு எதிராக சோதனைச்சாவடி சாலையில் நின்று கோஷங்களை எழுப்பினர். இதனால், ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனால், அங்கு பாதுகாப்பிற்காக அதிரடிபடை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.