ஏற்கனவே Traffic இதுல இது வேறயா… திம்பத்தில் திரும்ப முடியாமல் திணறிய சரக்கு லாரி : 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2022, 11:41 am
Dhimbam Traffic -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி பழுதடைந்து நின்றதால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் இம்மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.

கடந்த மாதம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களை பண்ணாரி சோதனைசாவடியிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடியிலும் வனத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு காலை 6 மணிக்கு திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்கப்படுகிறது.

இதனால் திம்பம் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியிலிருந்து மைசூருக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக லாரி பழுதடைந்து நின்றது.

இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலக் இடையே சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 941

0

0