காதல் என்ற போர்வையில் உல்லாசம் : ஏமாந்து போன கல்லூரி மாணவி கடிதம் எழுதி விட்டு தற்கொலை!!

6 July 2021, 4:43 pm
Love Suicide - Updatenews360
Quick Share

விழுப்புரம் : கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மகள் நர்மதா (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தந்தை இறந்துவிட்டதால் நர்மதா தனது தாய் ஜோதியுடன் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார். நர்மதாவுக்கும், ஏனாதிமங்கலத்தை சேர்ந்த நித்தியானந்தன் (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நர்மதாவிடம் அவர் உல்லாசம் அனுபவித்தார். இதில் நர்மதா கர்ப்பமானார்.

இதையறிந்த நர்மதாவின் உறவினர்கள் நித்தியானந்தன் வீட்டிற்கு சென்று நர்மதாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி நர்மதாவின் கருவை உறவினர்கள் கலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நர்மதா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், நர்மதாவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் நித்தியானந்தன் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூக்குப்போட்டு கொள்வதற்கு முன்பு நர்மதா கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.

அதில், எனது சாவிற்கு நித்தியானந்தன் தான் காரணம் என்று எழுதியுள்ளார். அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 226

0

0