மினி பஸ் அதிபர் வீட்டில் 35 சவரன் தங்க நகை கொள்ளை : சிசிடிவி இல்லாததால் திருடர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல்!!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2021, 2:42 pm
கன்னியாகுமரி : பள்ளியாடி அருகே மினி பஸ் அதிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகள் திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். மினி பேருந்து அதிபரான இவருக்கு மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி ஒரு மகள் மகனுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் தொழில் சம்பந்தமாக சுந்தர்ராஜ் சென்னைக்கு சென்ற நிலையில் மனைவி விக்டரி பாய் தனது பிள்ளைகளுடன் வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சுந்தர்ராஜ் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் காணப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் பிரோவை பார்த்த போது பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றதோடு கவரிங் ரக பேன்சி பொருட்களை விட்டு சென்றுள்ளனர் .
இதைக்கண்டு உடனடியாக சுந்தர்ராஜ் தக்கலை காவல் நிலையத்திற்கு தகவலளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டு போன பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் மர்ம நபர்களை கண்டுபிடிக்க கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
0
0