அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% இடஒதுக்கீடு வழங்குக : தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
22 September 2021, 6:26 pm
Seeman -Updatenews360
Quick Share

சென்னை : அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மருத்துவத்திற்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வினால் வாய்ப்புகள் பறிக்கப்பட்ட ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. இருப்பினும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு எவ்வித இட ஒதுக்கீடும் அளிக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 37,500 அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 46 இலட்சம் மாணவர்களும் சுமார் 8, 300 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஏறத்தாழ 22 இலட்சம் மாணவர்களும் பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய அதில் சரிபாதியளவு மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் பயில்கின்றனர். குறிப்பாக அறக்கட்டளைகள் மூலம் நடத்தப்படும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆதரவற்ற மற்றும் குடும்ப வறுமை காரணமாக விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் காரணமாகவே அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்குவதோடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், உதவித்தொகை என அத்தனை கல்வி உரிமைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் எவ்வித பாகுபாடுகளும் இல்லாமல் தமிழ்நாடு அரசால் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒன்றிய அரசினால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் நுழைவுத்தேர்வுகளினால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய கிராமப்புற மாணவர்களது மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி கனவுகள் கானல் நீராகும் பேராபத்து ஏற்பட்டது. அத்தகைய கொடுந்தேர்வுகளை முற்றிலுமாக ஒழிப்பதே பாதிக்கப்படும் மாணவர்களின் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதால் தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகிறது. இருப்பினும் முழுமையான விலக்கினைப் பெறும்வரை தற்காலிகத் தீர்வாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்பில் முந்தைய அதிமுக அரசினாலும், பொறியியல் படிப்பில் தற்போதைய திமுக அரசினாலும் வழங்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது.

இருப்பினும் தமிழ்நாடு அரசின் இத்தகைய தற்காலிக தீர்வுகள்கூட அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எட்டாக் கனியாகியிருப்பதுதான் மிகுந்த ஏமாற்றத்தையும், மன வேதனையையும் அளிக்கிறது. மற்ற எல்லாக் கல்வி உரிமைகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையாக வழங்கிடும் தமிழ்நாடு அரசு, இன்றியமையாத இட ஒதுக்கீடு உரிமையும், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்திட வழிவகைச் செய்ய வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் மிகமுக்கிய கோரிக்கையாக உள்ளது.

ஆகவே அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதலே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிட, தமிழ்நாடு அரசு உரியச் சட்டம் இயற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 216

0

0