தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி:தமிழக அரசு உத்தரவு

Author: kavin kumar
30 October 2021, 10:52 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் தீபாவளியன்று அனைத்து இறைச்சிக் கடைகளையும் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதே நாளன்று மகாவீரர் மோட்சம் பெற்ற நாளான “மகாவீர் நிர்வான் தினம்” ஜெயின் மதத்தினரால் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தன்று தமிழகத்தில் இறைச்சி கடைகளை மூடி வைக்க உத்தரவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று மகாவீர் நிர்வான் தினம் வருவதால், சென்னையில் நவம்பர் 4 ஆம் தேதி இறைச்சி கடைகளை திறக்க சென்னை மாநகராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டது. பொதுவாகவே தீபாவளி பண்டிகையன்று இறைச்சிக் கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பால் பொதுமக்களிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இறைச்சி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கைவிடுத்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளியன்று அனைத்து இறைச்சிக் கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்த ஆண்டு வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள அதே நாளில் மகாவீரர் ஜெயந்தி நாளும் வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில் பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள உள்ள இறைச்சிக் கடைகளை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 261

0

0