இரவு நேரம் என்று கூட பாராமல் மாணவிகளை பாதி வழியில் இறக்கி விட்ட அரசு பேருந்து : கொந்தளித்த பெற்றோர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2021, 10:52 am
Govt Bus - Updatenews360
Quick Share

கோவை : மாணவிகளை பாதி வழியில் இறக்கி விட்டதாக கூறி மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் அரசுப்பேருந்தை பெற்றோர்கள் சிறை பிடித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியபுத்தூருக்கு 8A என்ற அரசுப்பேருந்து தேக்கம்பட்டி வழியாக இயங்கி வருகிறது. இந்த தடத்தில் ஓரிரு அரசுப்பேருந்துகளும்,தனியார் பேருந்து ஒன்றும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேக்கம்பட்டி, வெல்ஸ்புரம், வேல் நகர், நெல்லித்துறை, விளாமரத்தூர், பூதப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேல்படிப்பிற்காக மேட்டுப்பாளையம், புஜங்கனூர் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தான் செல்ல வேண்டும்.

இப்பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம் பள்ளிகளுக்கு செல்லும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பேருந்தில் தான் செல்ல வேண்டும். அதுவும் நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல மகாதேவபுரம் பேருந்து நிலையத்திற்கு மாணவர்கள் வந்துள்ளனர். அப்போது,அங்கு வந்த 8 A அரசுப் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவர்களை ஏற்றிச்சென்றுள்ளனர்.

மேலும்,கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் சில மாணவிகளை அடுத்த பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டுச்சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சில மணி நேரங்களில் பணம் கொடுத்து ஆட்டோவில் வந்துள்ளனர். நேரத்திற்கு வர வேண்டிய மாணவிகள் வீட்டிற்கு உரிய நேரத்தில் வராத காரணத்தால் பெற்றோர்கள் பரிதவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு தேக்கம்பட்டி வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வந்த பேருந்தினை சிறைபிடித்த பெற்றோர்கள் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டதை அடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற ஒரு சில பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களால் இத்தகைய செயலால் ஒட்டுமொத்த அரசுக்குமே அவப்பெயரை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

இதுகுறித்து பெற்றோர் கூறுகையில் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தங்களால் தினமும் தனியார் ஆட்டோக்களில் அனுப்பி வைக்க முடியாத சூழல் உள்ளது எனவும்,இத்தடத்தில் கூடுதல் பேருந்துகளையும் இயக்க எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 134

0

0