ஸ்டீல் விலை உயர்வு விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை..!!

17 January 2021, 8:49 pm
steel rate - updatenews360
Quick Share

கோவை: ஸ்டீல் விலை உயர்வு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரி அரசு ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஸ்டீல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதத்தில் 60 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. ஸ்டீல் மற்றும் இரும்பு பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக அரசு பணிகளுக்கான திட்ட மதிப்பீடு 35 முதல் 40 சதவீதம் வரை கூடியுள்ளது.

அரசு பணிகளுக்கான டெண்டர் எடுத்தவர்கள் தொழில் நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஸ்டீல் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விலையை குறைக்க கோரி பல்வேறு அரசு துறைகளில் டெண்டர் எடுத்தவர்கள் நேற்று பணியை புறக்கணித்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கோவை உக்கடம் மேம்பாலம் பணி, 8 குளங்கள் சீரமைப்பு பணி, அம்ரித் குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை, மல்டி லெவல் கார் பார்க்கிங் பணி, வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டும் பணி, நொய்யல் ஆறு சீரமைப்பு, மாநில அளவில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையின் பல நூறு கோடி மதிப்பிலான திட்ட பணிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து, கோவை மாநகராட்சி காண்ட்ராக்டர் சந்திரபிரகாஷ் கூறுகையில்,

இப்போதுள்ள சூழலில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஸ்டீல் ஏற்றுமதி செய்யக்கூடாது. அப்போதுதான் விலை ஏற்றம் குறையும்.பல்வேறு அரசு துறை பணிகள் எடுத்த காண்ட்ராக்ட் அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டீல் விலை பழைய நிலைமைக்கு வர அதிக சாத்தியம் உள்ளது. ஆனால், சில ஸ்டீல் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சிண்டிகேட் போட்டு விலையை குறைக்காமல் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்டீல் நிறுவனங்கள் மீது மத்திய அரசு சிபிஐ வைத்து விசாரணை நடத்த வேண்டும்.

சிபிஐ விசாரணை கோரி அரசு காண்ட்ராக்டர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். ஸ்டீல் விலை உயர்வு காரணமாக மேம்பாலம், தரைப்பாலம், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, அரசு அலுவலங்கள், பள்ளிகள் கட்டுமானம், சீரமைப்பு பணிகள் தொடர்பான இ-டெண்டரில் விண்ணப்பிக்க ஒப்பந்த நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகிறது. மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Views: - 18

0

0