நிறை மாத கர்ப்பிணியை ஸ்கேன் எடுக்க அலைய விட்ட அரசு மருத்துவமனை : இறந்து பிறந்த பெண் குழந்தை!!

6 May 2021, 3:16 pm
Infant Baby Dead - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : வயிற்றில் அசைவில்லாமல் வந்த ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் ஸ்கேன் எடுக்க அரசு மருத்துவர்கள் அலைய விட்ட பரிதாபத்தால் குழந்தை இறந்து பிறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் குமார் சித்ரா தம்பதியினர் காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் வாடகை எடுத்து வசித்து வருகின்றனர். சித்ரா (வயது 31) 9 மாத கர்ப்பிணி பெண்.

கர்ப்பம் தரித்த நாளில் இருந்து தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை போன்றவற்றில் அவ்வப்போது போதிய ஆலோசனைகளையும் சிகிச்சையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் வயிற்றில் குழந்தை அசைவற்ற தன்மையில் இருப்பதைக் உணர்ந்த சித்ரா தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் இடம் சென்றுள்ளார். அவர் ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு 99 சதவீதம் சந்தேகமாக உள்ளது, நீங்கள் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி கடிதம் வழங்கி உள்ளார். பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்துடன் சித்ரா காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்தார்.

அந்தக் கடிதத்தில் எமர்ஜென்சி என குறிப்பிட்டு இருந்தும் பிரசவ பிரிவில் உள்ள மருத்துவர்கள் சித்ராவுக்கு உடனே சிகிச்சை அளிக்காமல் தனியார் ஸ்கேன் சென்டருக்கு சென்று மீண்டும் ஸ்கேன் எடுத்துக்கொண்டு வர கூறியுள்ளனர்.

அங்கு சென்ற போது தனியார் ஸ்கேன் சென்டர் மையம் மூடிபட்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து சுமார் கால் கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களை சந்தித்து தனியார் ஸ்கேன் சென்டர் மையம் மூடப்பட்டுள்ளது என முறையிட்டார்.

மருத்துவர்கள் தனியார் ஸ்கேன் சென்டர் மையத்துக்கு போன் செய்து சித்ரா என்ற பெண்ணுக்கு ஸ்கேன் எடுக்குமாறு கூறினர். மீண்டும் சித்ராவை அவருடைய உறவினர்கள் அழைத்துக்கொண்டு தனியார் மையத்துக்கு சென்று சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து 8.30 மணி அளவில் ரிசல்ட் வாங்கிக் கொண்டு வந்து மருத்துவர்களை சந்தித்தனர்.

ஸ்கேன் ரிசல்ட்டை பார்த்த மருத்துவர்கள் சித்ராவின் வயிற்றில் குழந்தை இறந்து உள்ளது எனக்கூறி அதிர்ச்சியுற செய்தனர். பிரசவ வார்டு பிரிவில் ஸ்கேன் வசதி இருந்தும் சித்ராவை இரண்டு முறை தனியார் ஸ்கேன் சென்டர் மையத்துக்கு அலைய விட்டதால் அவர் உடலாலும் மனதாலும் சோர்ந்து போய் இருந்தார்.

குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது என மருத்துவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும் அதை முறையாக தெரிவிக்காமல்,சித்ராவை ஸ்கேன் சென்டர் மையத்துக்கு அலையவிட்டதை எண்ணி உறவினர்கள் கொந்தளித்தனர்.

மேலும் சித்ரா வந்தவுடனே உடனடியாக சிசேரியன் செய்திருந்தால் குழந்தையை ஒரு வேலை காப்பாற்றி இருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் வயிற்றிலேயே இறந்த குழந்தையுடன் ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணை தனியார் ஸ்கேன் மையத்துக்கு இரண்டு முறை மருத்துவர்கள் அலையவிட்டது மிகவும் கொடுமையான செயல் என சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

இரவு 10 மணி அளவில் சித்ராவுக்கு அட்மிசன் போடப்பட்டு விடியற்காலை நாலு முப்பது மணி அளவில் இரண்டு கிலோ 800 கிராம் எடையுள்ள பெண் குழந்தை வயிற்றிலேயே இறந்து நார்மல் டெலிவரி ஆனது. சித்ரா உடல்நலத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சித்ராவுக்கு கடந்த பத்து வருடமாக குழந்தை இல்லாமல் (இரண்டு முறை அபார்ஷன் ஆகி விட்டது) இந்த முறை கர்ப்பம் தரித்தவுடன் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். நிறைய பணம் செலவு செய்து தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம் ,காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை போன்ற அனைத்து பகுதிகளிலும் முறையான மருத்துவ ஆலோசனைகளை தொடர்ந்து பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டர் மதியம் ஒரு மணி வரை மட்டுமே இயங்குவதாகவும், பிரசவ பிரிவிலுள்ள உள்ள ஸ்கேன் தெளிவான ரிசல்ட்டை அளிப்பது இல்லை எனவும் நோயாளிகள் கூறுகின்றனர். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நவீன கருவிகள் பல இருந்தும் தொழில் நுட்ப வல்லுநர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு உரிய முறையான சிகிச்சை அளிக்க வழி இல்லாமல் உள்ளது என நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 190

0

0