வாய்வு தொல்லை என அலட்சியம் காட்டிய மருத்துவர்… பணியின் போது அரசு காகித ஆலை ஊழியர் பலி… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

Author: Babu Lakshmanan
30 September 2022, 1:43 pm
Quick Share

கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலை ஊழியருக்கு சிகிச்சை அளிக்க காகித ஆலை மருத்துவமனை அலட்சியம் காட்டியதால், அந்த நபர் உயிரிழந்ததாகக் கூறி சக தொழிலாளர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலையில் ஆயிரத்து மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கிரெயன் ஆப்பரேட்டராக அருண் சுதன் (32) என்பவர் திருவையாறு சார்ந்தவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், சஹானா என்கின்ற 6 வயது பெண் குழந்தையும் உள்ளது.

நேற்று இரவு பணிக்கு உள்ளே வேலைக்கு சென்ற அவரை, 11 மணி அளவில் நெஞ்சுவலி என ஆலையில் உள்ள முதலுதவி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், வாய்வு தொல்லையாக இருக்கும் என்று கூறி சாதாரண மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகும் தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி இருந்திருக்கின்றது. காலை 4 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது மயங்கி கீழே விழுந்து விட்டார். காகித அலை முதலுதவி மையத்தில் பரிசோதித்த பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் அவர் அனுப்பப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால் பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு 11 மணிக்கு உடல் சரியில்லை என முதல் உதவி மையத்திற்கு சென்ற பொழுது முறையாக பரிசோதித்து பார்த்திருந்தால், அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றும், அவருடைய இறப்பிற்கு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம் என கூறி, அவரது உறவுனர்கள் மற்றும் தொழிலாளர்கள், மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 424

0

0