7.5% இட ஒதுக்கீட்டால் நனவானது மருத்துவக் கனவு..! மாணவியின் கல்லூரி செலவுகளை ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்..!

21 November 2020, 3:00 pm
Actor_Sivakarthikeyan_Helps_Sahana_UpdateNews360
Quick Share

18 வயதான ஜி.சஹானா எனும் ஏழை அரசுப் பள்ளி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மருத்துவப் படிப்பிற்கு உதவியுள்ளார்.

ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்த மாணவி :

சஹானாவின் தந்தை கே.கணேசன் ஒரு தையல்காரர் மற்றும் அவரது தாய் ஜி சித்ரா ஒரு இல்லத்தரசி. பேராவூரணியில் உள்ள பூக்கொல்லையில் உள்ள அவர்களது வீடு 2018’இல் கஜா புயலில் சேதமடைந்தது. மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலும் சஹானா அதற்கடுத்து வந்த 12’ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டார். மொத்தமுள்ள 600 மதிப்பெண்களுக்கு 524 மதிப்பெண்களைப் பெற்றார்.

இது தொடர்பாக பேசிய சஹானா, “நாங்கள் சூறாவளியில் எங்கள் குடிசையை இழந்தோம். எங்களுக்கு மின் இணைப்பு இல்லாததால், பள்ளியிலேயே படிப்பை முடித்தேன். என் ஆசிரியர்கள் எனக்கு பெரிதும் உதவினார்கள். நான் எனது பள்ளியில் முதலிடம் பிடித்தபோது, ​​நீட்டிலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன். நீட் 2019’இல், நானே சுயமாக எனது பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் படித்தேன்.” எனக் கூறினார்.

தனியார் பயிற்சி மையத்தில் படிப்பு :

ஆனாலும் 2019 நீட் தேர்வில் பெரிய அளவில் சோபிக்க முடியாத நிலையில், அவரின் எம்பிபிஎஸ் கனவை நனவாக்க நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பலர் உதவ முன்வந்தனர். நடிகர் சிவகார்த்திகேயன், சஹானா தனியார் கோச்சிங் சென்டரில் நீட் பயிற்சி பெற முழு நிதியுதவி செய்துள்ளார். 

இருதயநோய் நிபுணராக விரும்பும் சஹானா, “எனக்கு உதவ பலர் முன்வந்தனர். இதற்கு காரணமான எனது பள்ளி ஆசிரியருக்கு நன்றி. நடிகர் சிவகார்த்திகேயன் எனது நீட் பயிற்சிக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் நிதியுதவி செய்தார். நான் ஒரு வருடம் முழுவதும் படித்தேன். அவருக்கும் எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.” என்றார்.

அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் :

நீட் 2020’இல் சஹானா 273 மதிப்பெண்கள் பெற்றார். வழக்கமாக இந்த மதிப்பெண்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினம் எனும் சூழ்நிலையில், அதிமுக அரசின், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் இவரது எம்பிபிஎஸ் கனவு நனவாகிறது. 

திருச்சியில் உள்ள கேஏபி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் சஹானாவுக்கு இடம் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தனது மருத்துவக் கல்வியின் முழு செலவுகளையும் ஏற்க உள்ளதாக வாக்குறுதியளித்துள்ளதாக சஹானா கூறினார்.

Views: - 27

0

0