10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கைது!
Author: Hariharasudhan10 January 2025, 2:24 pm
திருவண்ணாமலை மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், காரப்பட்டு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 800 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில ஆசிரியராக சேரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர் 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பள்ளி ஆசிரியர் தன்னிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக மாணவி, தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த மாணவியின் பெற்றோர், பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் நடந்த உண்மைச் சம்பவமே கேம் சேஞ்சர்.. எஸ்.ஜே.சூர்யா சுவாரஸ்ய பகிர்வு!
இந்தப் புகாரின் அடிப்படையில், ஆங்கில ஆசிரியர் சேரன் என்பவரை போளூர் மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.