பெண்ணை நிச்சயம் செய்யும் போது தப்பியோடிய மாப்பிள்ளை கைது!!

31 August 2020, 12:22 pm
Engagement Groom Arrest - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டியில் முதல் திருமணத்தை மறைத்து அரசு ஊழியர் எனக் கூறி 2-வது திருமணம் செய்ய முயன்ற பாளையங்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை கிழக்கு பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த முப்பிடாதி மகன் முருகன்(வயது 32). இவர் தன் தங்கைக்கு மணமகனை தேடி திருநெல்வேலியில் உள்ள தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

அப்போது பாளையங்கோட்டை கோட்டூர் சாலை ஓம்சக்தி நகரைச் சேர்ந்த திருமலைராஜ் மகன் மணிகண்டன்(வயது 35) என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு பெற்றோர் இல்லை. இதனால் தாங்களே திருமணத்தை நடத்தும்படியும் கூறினார். இதையடுத்து, கடந்த 17-ம் தேதி முருகன் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில், கோவில்பட்டியில் உள்ள முருகன் வீட்டுக்கு மணிகண்டன் வந்தார். அப்போது அங்கு முருகனை காண அவரது நண்பர் வந்தார். அவரை பார்த்தவுடன் மணிகண்டன் தப்பியோடினார். அப்போதுதான், அவர் ஏற்கெனவே திருமணமானவர். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் கற்சிலைகளுக்கு பாலீஷ் செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, முருகன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஏற்கெனவே திருமணம் முடிந்து குழந்தைகளுடன் உள்ள மணிகண்டன், என்னிடம் அரசு ஊழியர் என பொய் சொல்லி 2-ம் திருமணம் செய்ய முயன்றார்.

மேலும், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் செலவு ரூ.40 ஆயிரம், 2 சவரன் நகை மற்றும் உறவினருக்கு வேலை வாங்கித் தருவதாக ரொக்கப்பணம் ரூ.3 லட்சம் வாங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.

Views: - 0

0

0