துப்பாக்கிச்சூடு வழக்கு : புழல் சிறையில் அடைக்கப்பட்ட திமுக எம்எல்ஏ இதயவர்மன்..!

22 July 2020, 7:52 pm
DMK MLA idhayavarman - updatenews360
Quick Share

செங்கல்பட்டு : நில அபகரிப்பு மோதலின் போது நில உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற வழக்கில், ஒரு நாள் போலீஸ் காவலுக்கு பிறகு திமுக எம்எல்ஏ இதயவர்மன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

திமுகவின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ இதயவர்மனுக்கும், ரியல் எஸ்டேட் அதிபரான சீனிவாசனுக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக எம்எல்ஏ இதயவர்மன் தன்னிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியின் மூலம் சுட்டுள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திமுக எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நடத்திய சோதனையில் அவரது வீட்டில் துப்பாக்கிகளும், குண்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவரை ஒருநாள் காவலில் எடுத்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, எப்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து நடித்துக் காட்டச் செய்தனர். அதனை போலீசாரும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

இதனிடையே, எம்எல்ஏ இதயவர்மனின் வீடு, அலுவலகம் மற்றும் குடோன் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் ஆய்வு நடத்தினர்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1 மணியுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததால், எம்எல்ஏ இதயவர்மன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.