கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு!!
Author: kavin kumar26 October 2021, 8:36 pm
சென்னை: முதலமைச்சர் மற்றும் பல்வேறு தரப்பினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோபிநாத் என்பவர் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2 மாதங்களில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களை புண்படுத்தும் வகையில், இரு மதத்தினருக்கு இடையே மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் 18 பதிவுகளை பதிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து கல்யாணராமன் வீட்டில் வைத்து அவர் மீது அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் கல்யாண ராமனுக்கு தற்போதைக்கு ஜாமீன் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த ஒரு சிலர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
0
0