50 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி : தனியார் உணவகத்தின் அதிரடி அறிவிப்பு.. அலைமோதிய உணவு பிரியர்கள்.. திணறிய போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2022, 6:34 pm
50 paise biriyani - Updatenews360
Quick Share

கரூரில் 50 பைசாவிற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி – தனியார் உணவக முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விற்பனை நீண்ட வரிசையில் காத்திருந்து, முண்டியடித்துக் கொண்டு சாப்பிட்டுச் சென்ற பிரியாணி பிரியர்கள் – போக்குவரத்துக்கு இடையூ ஏற்பட்டதால் போலீசார் வந்து சீரமைத்ததால் பரபரப்பு.

கரூர் – திருச்சி சாலையில் காந்தி கிராமம் பகுதியில் tandoori tribes எனும் பெயரில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் துவங்கப்பட்டு முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு 50 பைசாவிற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி என அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

முதலில் வரும் 100 நபர்கள் 50 பைசா கொடுத்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டு செல்லலாம் என சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டு இருந்தது. மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 11.30 மணி முதலே நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் காத்திருந்தனர்.

மதியம் 12 மணி முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் உள்ளே அனுமதித்து அவர்களுக்கு சுடச் சுட சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவியுடன் பரிமாறப்பட்டது. இந்த டோக்கனைப் பெற பலரும் முண்டியடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், 50 பைசாவுடன் வந்தவர்கள் இரு சக்கர வாகனங்களை சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைத்து விட்டு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து அங்கு பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் வந்தனர்.

போக்குவரத்தை சீரமைத்த அவர்கள், கடையின் உரிமையாளரை அழைத்து இது போன்று நிகழ்ச்சிகள் நடத்தும் போது காவல் நிலையங்களில் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதனையடுத்து 100 டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் பிரியாணி விற்பனை முடிந்ததாக தெரிவித்ததை அடுத்து அங்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 127 ரூபாய் வழக்கமாக விற்பனை செய்யப்படும் பிரியாணி 50 பைசாவிற்கு கிடைக்கும் என வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 529

0

0