கோவையில் கைவிடப்பட்ட குழந்தைகள் காப்பகங்களில் ஒப்படைப்பு.!

6 November 2020, 10:47 am
Born Babies - Updatenews360
Quick Share

கோவை: பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இருந்த 2 குழந்தைகளை பாதுகாப்பு அலுவலர்கள் முன்னிலையில் காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 10 நாள்களுக்கு முன் பிறந்த சில நாட்களேயான பெண் குழந்தை அநாதையாக விடப்பட்டிருந்தது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சென்றவர்கள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 2.4 கிலோ இருந்த பெண் குழந்தை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

அதேபோல் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி பிறந்து ஒரு வாரமேயான பச்சிளம் ஆண் குழந்தை தனியாக விடப்பட்டிருந்தது. இக்குழந்தையை மீட்டு குழந்தைகள் நலப்பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 1.1 கிலோ எடையில் இருந்த குழந்தைக்கு பச்சிளம் குழந்தை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அரசு மருத்துவர்களின் சிகிச்சையின் பலனால் குழந்தையின் உடல் எடை 2.1 கிலோவாக அதிகரித்தது. அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு குழந்தைகளும் உடல்நலம் சீராகி ஆரோக்கியத்துடன் இருந்ததால் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு மூலம் இரண்டு குழந்தைகளும் காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சுந்தர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ், இருப்பிட மருத்துவ அலுவலர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 2

1

0