மனைவிகள் இருப்பதால் இந்தியா தோற்கவில்லை.. பிசிசிஐக்கு ஹர்பஜன் சிங் கேள்வி!
Author: Hariharasudhan18 January 2025, 12:12 pm
வீரர்கள் உடன் மனைவிகள் இருப்பதால் இந்திய அணி தோற்கவில்லை என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், “தற்போது வெளியாகி உள்ள பத்தில் 9 கட்டுப்பாடுகள், நான் விளையாடிய காலத்திலிருந்தே அமலில் உள்ளது. இதனிடையே, அதனை மாற்றியது யார் எனவும், எப்போது மாற்றப்பட்டது எனவும் விசாரிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் தற்போது வெளியானது என்பது, இந்திய அணியின் தோல்விகளிலிருந்து கவனத்தை திசைத் திருப்புவதாக இருக்கிறது.
மனைவிகள், வீரர்களுடன் இருந்ததாலோ, ஒருவர் தனியாக பயணித்ததாலோ, நாம் தோற்கவில்லை. சில நேரங்களில் மோசமாக விளையாடியதே அந்த தோல்விக்கு காரணம். எனவே, அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனியாக வருவது என்றால் தலைமைப் பயிற்சியாளர் அல்லது தலைமைத் தேர்வாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும், குடும்பத்தினருடன் வீரர் தனியாக வருவது என்பது அணியினருடன் பிணைப்பை ஏற்படுத்தாது என்றும், கூறப்பட்டுள்ளது.
மேலும், எந்தத் தொடராக இருந்தாலும் குடும்பத்தினர், அதாவது மனைவி மற்றும் குழந்தைகள், வீரருடன் 14 நாட்கள் இருக்கலாம். அதுவும், இந்த 14 நாட்கள் முதல் 2 வாரங்கள் கிடையாது என்றும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.