நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய பெய்த கனமழை: ஒரே நாளில் நிரம்பிய 3 அணைகள்…!!

20 November 2020, 10:21 am
nellai rain - updatenews360
Quick Share

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய மழை பெய்த கனமழையால் ஒரே நாளில் 3 அணைகள் நிரம்பியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று பகலிலும் பல்வேறு இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், அச்சன்புதூர், கருப்பாநதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பாபநாசம் அணை

72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக 2 நாட்களில் 10 அடி உயர்ந்து, நேற்று காலை நிரவரப்படி 69.56 அடியாக உள்ளது. அணையின் உச்ச நீர்மட்டத்தை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 400 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கடனாநதி அணை மற்றும் ராமநதி அணைகளும் நேற்று நிரம்பின.

குண்டாறு அணை

இவைதவிர, தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 161 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. நெல்லையின் பிரதான அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை 122 அடியை எட்டியுள்ளது. பாபநாசம் அணையுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.68 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 91.60 அடியாக உயர்ந்துள்ளது.

மணிமுத்தாறு அணை

52 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 36.50 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாகவும், வெளியேற்றம் 50 கன அடியாகவும் உள்ளது. பாசனத்துக்காக பாபநாசம் அணையில் இருந்து 321 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் நேற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Views: - 19

0

0