ஆபத்தை உணராமல் அதிவேகமாக செல்லும் கனரக லாரிகள் : பெரும் விபத்து தவிர்ப்பு..!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2021, 3:19 pm
கோவை : கோவை சேரன் மாநகரில் சாலையில் சென்ற கனரக வாகனத்தில் இருந்து, பல டன் எடை கொண்ட இரும்புத் தகடுகள் தவறி சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ஹோப் காலேஜ் – சேரன் மாநகா் சாலையானது வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்று. அவிநாசி சாலை, திருச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சத்தி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்குச் சென்றடைய இச்சாலை பிரதான வழித்தடமாக உள்ளது.
பல மாதங்களாக குண்டும்குழியுமாகக் காணப்படும் இச்சாலையில், தற்போது, குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில், சேரன் மாநகா், பால்காரா் தோட்டம் பகுதி அருகே இரும்புத் தகடுகளை ஏற்றிக் கொண்டு அங்கிருந்த தொழிற்சாலைக்கு கனரக வாகனம் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
சாலை பழுதடைந்த நிலையிலும், இரும்புத் தகடுகளை உரிய பாதுகாப்பில்லாமல் கொண்டு சென்றதாலும், வாகனத்தில் இருந்த இரும்புத் தகடுகள் அப்பகுதியில் உள்ள இஸ்திரிக் கடையின் வாசலில் விழுந்தன. அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
அவ்வழியாக செல்லும் பெரும்பாலான கனரக வாகனங்கள் உரிய பாதுகாப்பு இல்லாமலும், வேகமாகவும் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அப்பகுதியில் போலீசார் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு விதிகளை மீறும் கனரக வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0