மேட்டுப்பாளையம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய உயர்மட்ட பாலம் : 4 கிராமத்திற்கான போக்குவரத்து துண்டிப்பு!!!

Author: Udayachandran
23 July 2021, 7:49 pm
Bridge Flow In River -Updatenews360
Quick Share

கோவை : பருவமழையால் மேட்டுப்பாளையம் அருகே லிங்காபுரத்தில் உள்ள 20 அடி உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியதல் நான்கு கிராமத்தற்கான போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையானது கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றில் ஓடும் தண்ணீரானது பவானிசாகர் அணையை சென்றடையும்

பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பவானி சாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் தற்போது 105 அடி வரை தண்ணீர் எட்டியுள்ளது.

இதன் காரணமாக பவானி சாகர் அணையின் நீர் தேக்க பகுதியாக உள்ள சிறுமுகை லிங்காபுரத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 20 அடி உயர்மட்ட பாலமானது தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது.

லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல், மொக்கைமேடு, உளியூர், ஆலூர் உள்ளிட்ட நான்கு கிராம பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் இப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும்,1000 ஏக்கருக்கும் மேல் விவசாயமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இந்த உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி இந்த கிராமங்கள் துண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஒவ்வொரு பருவமழை காலத்திலும் ஆண்டுக்கு இருமுறை இப்பாலம் தண்ணீரில் மூழ்கி வருவதால் இந்த உயர்மட்ட பாலத்தை தாண்டி செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன்,கல்வி வேலைவாய்ப்பு என அந்த கிராம மக்கள் பாலம் தண்ணீரில் மூழ்கும் போது மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக மாற்று பாலத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Views: - 190

0

0