கோவையில் கோவில்கள் குறிவைத்து இடிக்கப்படுகிறதா?: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…500க்கும் மேற்பட்டோர் கைது..!!

16 July 2021, 4:35 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சி திட்டமிட்டு இந்து கோவில்களை மட்டும் இடிப்பதாக குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை முத்தண்ணன் குளத்தை சுற்றிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக, நடைபாதை, வண்ண விளக்குகள், என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி குளக்கரையில் இருந்த பழமை வாய்ந்த அம்மன் கோவில் இடிக்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி பொது மக்கள், இந்து முன்னணியினருடன் இனைந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில்,கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இந்து கோவில்களை மட்டும் இடிப்பதாக கூறி இந்து முன்னணியினர் மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாநில செயலாளர் கிஷோர்குமார் பேசுகையில், “முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு இருப்பது இந்துக்களை வேதனைப்படுத்தி உள்ளது. 150 ஆண்டுகளுக்கு மேலான கோவில்களை இடிப்பது பக்தர்களை புண்படுத்துகிறது. இதற்காக இந்து முன்னணி இன்று போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.

தொடர்ந்து இந்து கோவில்கள் மீது கைவைத்தால் இந்து முன்னணி பொதுமக்களை திரட்டி பெரிய போராட்டங்களைக் கையிலெடுக்கும். கோவை மாநகராட்சி கோவில்களை இடிக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும். எவ்வளவோ ஆக்கிரமிப்பு பகுதிகள் கோவை மாநகராட்சியில் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு மக்கள் நிம்மதிக்காக செல்லும் கோவிலை இடித்து அகற்றுவதன் பின்னால் சதி இருப்பதாக தோன்றுகிறது” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தசரதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் கோட்ட செயலாளர் சதிஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Views: - 129

0

0