காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை..! ஒகேனக்கல்லில் 1.20 லட்சம் கனஅடி நீர்வரத்து
9 August 2020, 9:20 pmமேட்டூர்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
தென்மேற்கு பருவமழையால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. ஆகையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் நிலையை எட்டி உள்ளன. பாதுகாப்பு கருதி, உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து விநாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை 75.83 அடியாக உயர்ந்தது. 2 நாட்களில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து இருக்கிறது. நீர் இருப்பு 34.44 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், கரையோர மக்களுக்குக்கும், மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து கரையோரம் முகாம் அமைத்து தங்கி உள்ள மீனவர்கள், முகாம்களை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அதிகாரிகள் தரப்பு செய்து வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாத மழை காரணமாக நீர்வரத்தும் திறப்பும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இன்னும் 7 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.