புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை : அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு…

Author: kavin kumar
18 January 2022, 2:40 pm
Quick Share

புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக கடந்த வாரம் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 15 முதல் 18 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்ததால் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவசர ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை கூட்டத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 10, 11, 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் 15 முதல் 18 வயதுடைய 60 சதவிகித மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 20 சதகிவித மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி செலுத்த அனுமது அளிக்க மறுப்பதாக தெரிவித்தார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.

Views: - 412

0

0