மாணவர்களின் வீட்டுக்கே சென்று பாடம் எடுக்கும் பள்ளி தலைமையாசிரியர்!!

5 September 2020, 10:45 am
School HM - Updatenews360
Quick Share

மதுரை : மாணவர்களின் கல்வி பாதிப்படையக் கூடாது என்பதற்காக மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்களின் செயல் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

மதுரை கீழ சந்தைப்பேட்டையில் அரசு உதவி பெறும் டாக்டர் திருஞானம் நாடார் உறவினர் முறைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. மதுரை கல்மேடு, மேலமடை, சக்கிமங்கலம், LKP நகர், வண்டியூர், சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கொரானா நோய் பரவல் காரணமாக பொது முடக்கம் போடப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு வரும் இடைவெளி அதிகரித்தது. அதோடு மாணவர்கள் இடைநிற்றலை அதிகரிக்கும் என்பதை மனதில் கொண்டு பள்ளி தலைமையாசிரியர் சரவணன் முயற்சி எடுத்து மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் வீட்டு பகுதிக்கு சென்று கற்றுத்தர முயற்சி எடுத்தார்.

அதன்படி இந்தபள்ளி ஆசிரியர்களை தன்னுடன் அழைத்து கொண்டு கடந்த ஒரு வாரமாக மாணவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அங்கு மரத்தின் நிழலில் மற்றும் பொதுவான இடத்தில், திண்ணைகளில் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு பாடம் கற்பித்து தருகிறார்கள்.

கல்வி பயில வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து கிருமிநாசினியாக கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள செய்து போதிய சமூக இடைவெளியில் உட்கார வைத்து அவர்களுக்கு பாடங்களை கற்றுத் தருகின்றனர்.

அதோடு எழுத்து பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி,உடற் பயிற்சி போன்றவையும் கற்றுத் தருகின்றனர். மாணவர்களின் இருப்பிடத்திற்கே சென்று பாடங்களை கற்றுத் தருவதால் மாணவர்கள் பள்ளிக்கு வரும் இடைவெளியை வெகுவாக குறைப்பதாகவும், பெற்றோர்களுக்கு உதவியாக மாணவர்கள் செல்வதால் பள்ளி கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் சூழ்நிலையை குறைப்பதற்காகவும் இந்த முயற்சி எடுத்துள்ளதாக பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார்.இப்பள்ளி ஆசிரியரின் பெரும் முயற்சியை கண்டு பெற்றோர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

எழுத்து அறிவிப்பவனே இறைவன் ஆவான். அப்படி இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காக வீட்டிற்கே சென்று ஒரு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவது ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசானும், குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவரின் கூற்றை நிறைவேற்றுவது வரவேற்க தக்கதாகும்.

Views: - 6

0

0