பத்து ரூபாய்க்கு பிரியாணி பார்சல்..!! கட்டுக்கடங்காத கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!!!

18 October 2020, 6:47 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் திறப்பு விழா சலுகையாக பத்து ரூபாய்க்கு பிரியாணி பார்சல் என்ற அறிவிப்பால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயத்துடன் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமல் குவிந்தால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் இன்று புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக பத்து ரூபாய் நாணயம் கொண்டு வரும் அனைவருக்கும் ஒரு பிரியாணி பார்சல் வழங்கப்படும் என கடை நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று காலை முதலே பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயத்துடன் அந்த கடை முன்பு குவிய தொடங்கினர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையின் முன்பு குவிந்துள்ளனர் இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரியாணி வாங்க வந்த பொதுமக்கள் கடுமையான வெயில் என்றும் பாராமல் பிரியாணி வாங்குவதற்காக ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்றதால் அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் முக கவசம் சமூக இடைவெளி இன்றி கூடியதால் நோய் தொற்று பரவும் அச்சத்ததை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடை காலத்தில் தடை உத்தரவை மீறி கூட்டத்தை கூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.