வீட்டு வாடகையை கேட்ட உரிமையாளர் கொலை.! புதுச்சேரியில் பயங்கரம்.!!
4 August 2020, 1:42 pmபுதுச்சேரி : புதுச்சேரியில் வீட்டு வாடகை கேட்க சென்ற உரிமையாளரை இளைஞர் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் பக்கமுடையான்பேட் ஜீவா காலனியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருக்கு சொந்தமாக 5 வீடுகள் உள்ளன. இதில் நான்கு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீடுகளில் ஒன்றில் இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அருண் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக அவர் சரியாக வாடகை கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டு உரிமையாளர் புருஷோத்தமனுக்கும், அருணுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு புருஷோத்தமன் வாடகை கேட்பதற்காக அருண் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அருண் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வீட்டு உரிமையாளர் புருஷோத்தமனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோரிமேடு போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் போகும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இறைச்சிக்கடை தொழிலாளி அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் வீட்டு வாடகை கேட்டு சென்ற வீட்டு உரிமையாளரை, வாடகைக்கு இருந்த நபர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.