குடும்ப பிரச்சனைனு எப்படி CM ஸ்டாலின் சொல்லலாம்? விஸ்வரூபம் எடுக்கும் விழுப்புரம் கொலை சம்பவம்.. மறியலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2023, 2:23 pm
Protest - Updatenews360
Quick Share

விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 45). விழுப்புரம் எம் ஜி ரோடு வீதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்தார்.

கடந்த 2 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.நேற்று மாலை பல்பொருள் அங்காடியில், நோன்பு கஞ்சிக்கான பொருட்களை வாங்க இப்ராகிம் சென்றார்.

அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணிடம் இரண்டு வாலிபர்கள் தகராறு செய்து தாக்கினர். இதைக்கண்ட இப்ராகிம் மற்றும் அரசமங்கலத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் தீபக் (வயது 23) ஆகியோர் அந்த வாலிபர்களை தட்டிக் கேட்டனர்.

ஆத்திரமடைந்த வாலிபர்கள் இப்ராகிம், தீபக் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினர். இதில், இப்ராகிம் வயிற்றிலும், தீபக் முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தப்பியோட முயன்ற வாலிபர்களை ஊழியர்கள் மடக்கிப் பிடித்து போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். இதில் மருத்துவமனைக்கு சென்ற இப்ராஹிம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அடுத்து விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த ஞானசேகர் மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ரோடு, காமராஜர் வீதி, பாதஷா வீதி உள்ளிட்ட பல கடைகள் அடைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்ராஹிம் உடலை மருத்துவமனையில் இருந்து நேராக பல்பொருள் அங்காடி வாசலில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை செய்து அங்கிருந்து சடலத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் இந்த கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றது என்று கூறியதாக வணிகர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதே போல இறந்த இப்ராஹிம் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் சென்னை திருச்சி புறவழிச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் காவல்துறையினர் இரண்டு பகுதிகளிலும் பேச்சுவார்த்தை நடத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

பின்னர் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா சாலை மறியல் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தார்.

இதனால் திருச்சி சென்னை புறவழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரம் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படவே சாலை மறியல் கைவிடப்பட்டது.

ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற போராட்டத்தால் பொதுமக்களின் போக்குவரத்து பெரிதும் பாகதிக்கப்பட்டது.

Views: - 297

0

0