நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது..,மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!

13 September 2020, 12:44 pm
Quick Share

நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 2016ஆம் ஆண்டு சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017 முதல் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்து வருகிறது. அதே நேரம், நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலை தொடர்கிறது.

இந்த சூழலில் நேற்று ஒரு மாணவி உட்பட 2 மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டனர். இது குறித்து நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ‘முழுமையாகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுக அரசின் கொள்கை முடிவு என குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற உத்தரவாதமும் தரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அதனையடுத்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் எழுந்துள்ள நிலையில், நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் மாணவர்களின் தற்கொலை மனநிலையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Views: - 0

0

0