காதல் மனைவி தீக்குளிப்பு.. தற்கொலைக்கு தூண்டியதாக கணவனுக்கு 10 ஆண்டு சிறை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2021, 5:57 pm
Tirupur Judgement -Updatenews360
Quick Share

காதல் திருமணம் செய்த மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பனியன் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரும் அதே பகுதியை சேர்ந்த வித்யா என்பவரும் கலப்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருப்பூர் வீரபாண்டியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் முருகானந்தம், வித்யாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விதியா வீட்டிற்குள் சென்று தீக்குளித்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வித்யா இறந்தார்.

இது தொடர்பாக வீரபாண்டி போலீசார் முருகானந்தம் மீது மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதனிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணம் நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், கொடுமை படுத்தியதற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 3000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பாண்டியன் வாதாடினார்.

Views: - 684

0

0