இன்றை நம் வசப்படுத்துவோம், நாளை நமதாகும்..! தொண்டர்களிடம் மனம் திறந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்..!

11 May 2021, 9:47 pm
KAMAL_HAASAN_UpdateNews360
Quick Share

தமிழக சட்டசபைத் தொகுதியில் கோவை தெற்கு தொகுதியில் கடைசி நிமிடத்தில் பறிபோன வெற்றி வாய்ப்பு, தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தோல்வி, மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறியது உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பற்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மனம் திறந்து தனது கட்சியினரிடம் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :-
“உயிரே உறவே தமிழே,

என் குரல் எதுவென்று தெரிந்து வைத்திருக்கும் இனிய உறவுகளுக்கு நன்றி.

மக்கள் நீதி மய்யம் அமைக்கப்பட்டது அரசியலை வியாபாரமாக்கிய இன்றைய அரசியலில் இருப்பவர்களுக்கு இன்னொரு கட்சியாக அல்ல. சீரழிந்துள்ள அரசியலில் ஒதுக்கப்பட்டுப் புக முடியாமல் இருக்கும் வர்க்கங்கள், இளைஞர்கள், மகளிருக்காகத் தொடங்கப்பட்டது அது. எனவே, அரசியலை வியாபாரமாகப் பார்க்காமல் கடமையாகப் பார்ப்பவர்கள் மட்டுமே இக்கட்சியில் தங்கி செழிக்க முடியும்.

மநீமவின் இந்த நிலை வெற்றி எனும் பட்டியலில் சேராது எனினும், அந்தப் பாதையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உறுதி. எப்படி?

நான் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். என் சொந்தச் சம்பாத்தியத்தில் செலவு செய்த அந்தத் தொகை எனக்குப் பெரிது. ஆனால், நம்முடன் களம் கண்ட போட்டியாளர்கள் செலவை ஏணி வைத்தால் கூட அது எட்டாது. அப்படி இருந்தும் மும்முனைப் போட்டி இருந்த தொகுதியில் 33 விழுக்காடு மக்கள் நம்மை மதித்து வாக்களித்துள்ளார்கள். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகள் வாங்காத மக்கள் நீதி மய்யம் 33 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளதென்பதை நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.

இன்னும் இரண்டாயிரம் பேர் வாக்களித்திருந்தால், சரித்திரம் சற்றே மாறியிருக்கும். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அந்த 33 விழுக்காடு மக்கள் நம் பக்கம் இருந்தார்கள். தொடர்ந்து இருப்பார்கள். இதுபோன்று எல்லா தொகுதிகளும் ஆகமுடியும். நாம் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். சாதனை என்பது சொல் அல்ல, செயல்.

இந்த நேரத்திலும் என் தலைவன் இருக்கின்றான். அவன் எங்களை வழிநடத்தியே தீருவான் என்று நம்பிக்கை கொள்ளும் நம்மவர் கூட்டம் இருக்கும் வரையில் எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்த முடியாது.

தற்போது விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த விமர்சனங்களில் எத்தனை விழுக்காடு நிஜம் இருக்கிறது என்று ஆய்ந்து பொய்களைக் களைந்து அயர்வின்றிப் பயணத்தைத் தொடர்வோம். கள ஆய்வுகளைச் செய்து தொண்டர்கள் செய்திகளை எனக்கு அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள். அந்த ஆய்வு இல்லாமல் களை எடுப்பதும் உசிதமல்ல.

ஒன்று மட்டும் உறுதியாகக் கூறுகிறேன். தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவார்களென காத்திருப்பவன் நானல்ல. தவறிழைத்தவர்களைத் திருத்தும் கடமையும், உரிமையும் உள்ள தலைவன் நான். கடமை தவறினால் இங்கே காலம் தள்ள முடியாதென்பதை உணர்ந்தவர்கள் தாமே வேறு சந்தை தேடிப் போய்விடுவர் என்பது கட்சியைத் தொடங்கும்போதே எனக்குத் தெரிந்ததே.

தலைவன் குரலுக்கும் மாரீசன் குரலுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் என் சகோதர சகோதரிகள். விருட்சமாய் அதிவேகத்தில் வளரும் எந்தக் கட்சியிலும் இலை உதிர்தல் நடந்த வண்ணம் இருக்கும். வசந்த காலமும் அப்படித்தான். நம் கட்சியின் நோக்கம், இலக்கு ஆகியவற்றைச் சூழலுக்கு ஏற்ப, சதிக்கு ஏற்ப நாம் மாற்றியமைக்க முடியாது.

எல்லா தொகுதிகளிலும் பொறுப்புகளுக்குப் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தும் அந்தப் பொறுப்புகளுக்கு ஆள் போடாமல் இருந்தது விபத்தல்ல என்பது இப்போது வெளிச்சமாகிறது.

Honesty is a luxury very few people can afford என்று நான் அடிக்கடி குறிப்பிடுவதைக் கேட்டிருப்பீர்கள். நேர்மை எனும் அந்தச் சுகம், செளகர்யம் எல்லாருக்கும் கட்டுப்படியாகாது.

நிற்க, பொள்ளாச்சியில் புதிய கட்சி அலுவலகம் திறந்தவர்களுக்கு என் வாழ்த்துகள். தூத்துக்குடியிலும் புதிய கட்சி அலுவலகத்திற்கான ஏற்பாடுகள் நடப்பதாக செய்தி வந்தது. அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் தங்கள் கட்சியை இணைத்துக் கொள்ள விரும்புவதாக சில இளம்கட்சிகள் முன்வந்துள்ளன. மக்கள் நம்பால் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மற்றும் ஒரு சான்று இது.

உங்களை எல்லாம் நேரில் சந்திக்கத் துடிக்கிறேன். ஆனால், இப்போது பொது ஊரடங்கு இருப்பதால் அது சாத்தியம் அல்ல. எனவே, மக்கள் சங்கடங்கள் குறையட்டும், ஓயட்டும். மீண்டும் நாம் சந்திப்போம், சிந்திப்போம், கலந்துரையாடுவோம், எதிர்காலப் பயணத்தைத் திட்டமிடுவோம்.

அதற்குள் உங்கள் மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சல் (email) செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும் எனக்கு முக்கியமானது, கட்சிக்கு மகத்தானது. எனவே தவறாது உங்கள் சிந்தனைகளை எழுத்தில் அனுப்புங்கள்.

இன்றை நம் வசப்படுத்துவோம், நாளை நமதாகும்.”

இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Views: - 145

0

0