எனது பணிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது : அண்ணா பல்கலை.,துணை வேந்தர் சூரப்பா…

13 November 2020, 2:36 pm
Surappa Explains- Updatenews360
Quick Share

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக மத்திய அரசு அறிவித்ததற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் தமிழக அரசின் வசம் இருந்து பல்கலை., மத்திய அரசுக்கு செல்லும்.

மேலும் கல்விக்கட்டணம் உயர வாய்ப்புள்ளது. இதனால் அண்ணா பல்கலைகழகம் ஏழை மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்படும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என புறக்கணித்தது.

இதனிடையே துணை வேந்தர் சூரப்பா தன்னிச்சையாக மத்திய அரசுக்க கடிதம் எழுதினார். அதில் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தருமாறும், இதற்கு மாநில அரசின் நிதியுதவி வேண்டாம் என கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, தமிழக அரசு என் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கிறதா என்பதை கல்வியாளர்கள் கூற வேண்டும் என கூறினார்.

மேலும் தனக்கு பெயர் குறிப்பிடாமல் மிரட்டல் கடிதங்கள் அதிகம் வருவதாக கூறிய அவர், பணிமாறுதல் வேண்டும் என்றும் இல்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள். என் மீதான புகார்களில் உண்மை இல்லை என்று அனைவருக்கும் தெரியும் என கூறினார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் உள்ளிட்ட யாரையும் நான் சந்திக்க செல்வதில்லை என கூறிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா கூட முறைகேட்டில் ஈடுபடவில்லை என கூறினார். இந்த புகார்களால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கான எனது பணிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது என்றும், என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சரியம் தருகிறது என கூறினார். எனது பதவிக்காலத்தில் நேர்மையை கடைபிடித்துள்ளேன், பணி நியமனங்களுக்கு 8 பைசா வாங்கியிருந்தாலும் ஆதாரத்தை காட்டுங்கள் என கூறினார்.

Views: - 24

0

0