மீண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் : ஒரு ஓட்டு வாங்கிய பாஜக ஆதரவு வேட்பாளர் நம்பிக்கை!!

Author: kavin kumar
12 October 2021, 10:34 pm
Quick Share

கோவை: மீண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்று பாஜகவுக்கு பெருமை சேர்ப்பேன் என பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளர் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சியில் பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு ஓட்டு வாங்கியது சமூக ஊடகங்களில் விமர்சனதுக்கு ஆளானது. இந்த நிலையில் ஒரு ஓட்டு பெற்ற வேட்பாளர் கார்த்திக் இதுகுறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 9வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டுமே வாங்கியதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. நான் இருப்பது 4வது வார்டில் எனக்கும், எனது குடும்பத்திற்கும் அங்கு தான் ஓட்டு உள்ளது. இடைத்தேர்தல் வருவதையொட்டி, 9வது வார்டில் போட்டியிட்டு பார்ப்போம் என அங்கு போட்டியிட்டேன்.

எனது குடும்ப சூழ்நிலை காரணமாக சரிவர பிரச்சாரம் செல்ல முடியவில்லை. நான் அந்த வார்டில் நிற்கிறேன் என்பதை யாருக்கும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. எனினும், எனக்கு ஒரு ஓட்டு கிடைத்திருக்கிறது. அதையே நான் வெற்றியாக எடுத்துக்கொள்கிறேன். மீண்டும் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடுவேன். 4வது வார்டில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை அடைவேன். பாஜகவுக்கும் பெருமை சேர்ப்பேன். இந்த ஒரு வாக்கு கிடைத்ததை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அரசியல்வாதிகளும், செய்தி ஊடகங்களும் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நான் என்னுடைய கட்சி மேலிடத்துக்கு கோரி, காவல்துறையிடமும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வேன்.என கூறினார்.

Views: - 257

0

0