பெண்கள் பள்ளி எதிரே ‘இரண்டாம் குத்து’ திரைப்பட போஸ்டர் : சாலையில் சென்ற பெற்றோர் செய்த திடீர் செயலால் பரபரப்பு!!

By: Babu
10 October 2020, 1:14 pm
IAMK - cbe- updatenews360
Quick Share

ஆபாச காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட காட்சிகளைக் கொண்ட டீசரை வெளியிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் படம் இரண்டாம் குத்து. இயக்குநர் பாரதிராஜா உள்பட பல்வேறு பிரபலங்களும் வெளிப்படையாகவே இந்தப் படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை தேர்முட்டியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சுவரில் இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அப்போது, அந்தப் பகுதியின் வழியே சென்றுகொண்டிருந்த நகைக்கடை ஊழியரான தினேஷ் என்பவர், திடீரென ஆபாசமாக இருந்த அந்தப் போஸ்டர்களை கிழித்து எரிந்தார். அவரது இந்த செயல் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

கொரோனா சமயத்தில் சென்சார் முறை இல்லாத ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருவதால், ஆபாசங்களுக்கு பஞ்சமில்லாமல் காட்சிகள் இடம்பெற்று விடுகின்றன. தற்போது, ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழல் இருப்பதால், அவர்கள் தடம் மாறி விடாமல் இருக்க, ஓடிடி திரைப்பட வெளியீட்டிற்கு சில கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் கொண்டு வரவேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து தினேஷ் கூறுகையில், “இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்பட இயக்குனரின் அடுத்த படம் தான் இந்த ‘இரண்டாம் குத்து’. இந்த படத்தின் போஸ்டர் மிகவும் ஆபாசமாக உள்ளது. இந்த போஸ்டர் பள்ளிக்கு எதிரே ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் பெண்கள் இந்த பகுதியை கடக்கும் பொழுது வருத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே, முகம் சுழிக்கும் அளவிற்கு ஆபாசமாக உள்ள இந்த போஸ்டரை கிழித்தேன்,” என்றார்.

Views: - 43

0

0