மீண்டும் இழிவுபடுத்தினால் திருமாவுக்கு சேலைக் கட்டும் போராட்டம் நடத்துவோம் : வேலூர் இப்ராஹிம் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2021, 7:23 pm
Vellore Ibrahim Warn -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்னொருமுறை இந்து கடவுள்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் இழிவாக பேசினால் தானே தலைமைதாங்கி திருமாவளவனுக்கு சேலைகட்டும் போராட்டத்தை நடத்துவேன் என வேலூர் இப்ராஹீம்‌ காட்டமாக கூறியுள்ளார்.

பழனி கோவிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி பழனியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கோவில்களில் வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் பக்தர்களை அனுமதிக்க தமிழகஅரசு தடை விதித்துள்ளது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதன் ஒரு பகுதியாக பழனியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீம், மாநில மகளிரணி தலைவி மீனாட்சி நித்யசுந்தர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய வேலூர் இப்ராஹிம், நமது நோக்கம் முக்கியமானது. ஒவ்வொரு மனிதனின் வழிபாட்டு உரிமையை தடுப்பது தவறானது. இதன்காரணமாக சமூகத்தில் பல்வேறு தவறுகள் நடக்கிறது. மன அமைதியை தேடி அனைவரும் செல்லும் கோவிலையும், வழிபாட்டு தலங்களையும் மூடிவிட்டு திராவிட முட்டாள் கழக அரசு சாராயக்கடையை திறந்துள்ளது.

டாஸ்மாக் கடையை திறந்து பெண்களின் தாலியை அறுக்கும் அரசு திமுக அரசு என்றும், சாராயக்கடையால் பரவாத கொரோனா கோவில் திறப்பதில் தடை செய்துள்ளதன் மூலம் திமுக இந்து விரோத அரசு என்பது உறுதியாகிறது என்றும், இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பேசிவிட்டு, சிதம்பரம் கோவிலில் வழிபடும் திருமாவளவனை மதநல்லிணக்கவாதி போல சித்தரிக்கிறார்கள்.

திருமாவளவன் இன்னொரு முறை இந்துமதக் கடவுள்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் இழிவாகப் பேசினால் திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டத்தை தானே தலைமையேற்று நடத்துவேன் என்றும் பேசினார்.

தொடர்ந்து பாஜக மூத்த‌தலைவர் H.ராஜா பேசியதாவது :-

தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38,661 கோவில்களில் 20சதவிகிதம் கோவில்கள் தற்போது இல்லை என்றும், தமிழகத்தில் உள்ள பல‌கோவில்கள் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் சேதமடைந்துள்ளன.

இதை எடுத்துக் கூறினால் அறநிலையத்துறை அதிகாரிகள் என்மீது புகார் அளிக்கிறார்கள். அனைத்து கோவில்களின் இணை ஆணையர்களும் கடமை தவறியவர்கள் என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

கோவிலை எடு.. பராமரிக்காமல் அழி என்பதுதான் பெரியாரிஸ்டுகளின் குறிக்கோள் என்றும், இதன்படி 7000 கோவில்களை நாத்திக இந்து விரோத கழகங்கள் அழித்துள்ளன என்றும், இது முகலாயர்கள் படையெடுப்பில் நடந்த கோவில்கள் அழிப்பின் எண்ணிக்கையை விட இவர்கள் அழித்தது அதிகம் என்று பேசினார்.

பழனி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோவில்கள் பாலாலயம் நடைபெற்று பல ஆண்டுகளாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருப்பது திட்டமிட்ட செயல் என்றும், உடனடியாக அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Views: - 654

0

0